மதுரை: மதுரை மாவட்டத்தில் தை 1ஆம் தேதி முதல் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மற்றும் மஞ்சு விரட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இதன்படி, நேற்று (ஜனவரி 15) அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிவடைந்தது. இன்று (ஜனவரி 16) பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
மதுரை மாவட்டம், எலியார்பத்தியில் மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு விடுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த போட்டியை நடத்த அனுமதிக்கவில்லை. இந்த நிலையில்., காவல் துறைக்குத் தெரியாமல் கிராம சாஸ்திரத்திற்கு 3 அல்லது 4 ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டு மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுவது வழக்கம்.
அதேபோல் இன்று (ஜனவரி 16) மாட்டுப் பொங்கலை முன்னிட்டு எலியார்ப்பத்தி கிராமத்தில் நடைபெற்ற கிராம மஞ்சுவிரட்டு போட்டியில் காளை ஒன்று வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த நபரின் இடது பக்க மார்பில் குத்தியதில் அதே கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற வாலிபர் படுகாயம் அடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு வரும் வழியில் உயிரிழப்பு.
உயிரிழந்த வாலிபர் ரமேஷ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவியும், 2 வயதில் ஜெனி என்ற மகளும் உள்ளனர். இன்று நடைபெற்ற கிராம மஞ்சுவிரட்டு போட்டியில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நின்று கொண்டிருக்கும் போது மனைவி கண்முன்னே காளை மாடு குத்தி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் கட்டட வேலை பார்த்து வந்த ரமேஷ் மீது காளை முட்டியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்த ரமேஷ் குறித்துக் கூடக்கோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த வாலிபரின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் விழா முன்னிட்டு நடைபெற்ற கிராம மஞ்சுவிரட்டில் காளை குத்தியதில் வாலிபர் ரமேஷ் உயிரிழந்ததன் காரணமாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் கதறி அழும் காட்சி காண்போரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: பாலமேடு ஜல்லிக்கட்டு; விறுவிறுப்படைந்த 6வது சுற்றின் நிலவரம்!