சென்னை: திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், பெண்களுக்கு மட்டுமல்ல, எல்லா மதங்களுக்கும் மரியாதை தரும் ஒரே கட்சி திமுக மட்டும்தான் எனத் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரான சத்தியராஜ் கதாநாயகன், வில்லன் என பல்வேறு கதாபாத்திரங்களில் மூலமாக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதுமட்டுமின்றி, திரைப்படங்களில் நடிகர் சத்யராஜ் உச்சரிக்கும் வசனங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. மேலும், பெரியாரைப் பின்பற்றும் அவர் பெரியாரின் கொள்கைகளை அனைத்து இடங்களிலும் பேசக் கூடியவர்.
திமுக பொதுக்கூட்டங்களிலும் நடிகர் சத்தியராஜ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு பேசியும் வருகிறார். அந்த வகையில் திமுகவின் ஆதரவாளராகவே தெரியப்பட்டவர் நடிகர் சத்தியராஜ். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வின் போது, திமுக பொருளாளர் டி.ஆர் பாலு, அமைச்சர்கள் கே.என் நேரு, பி.கே சேகர் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
திமுகவில் இணைந்த பின்பு பேசிய நடிகர் சத்தியராஜின் மகள் திவ்யா, "மக்கள் பணி செய்ய வேண்டும் என்பது எனது கனவு. திமுக பெண்களுக்கு மரியாதை தரும் ஒரு கட்சி. நான் ஒரு ஊட்சத்து நிபுணர் ஆரோக்கித்திற்கு மிகவும் முக்கியத்துவம் தருவேன். திமுக ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் கட்சி. அதற்கு உதாரணம் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்தான்.
இதையும் படிங்க: காங்கிரஸுடன் கூட்டணி? - தவெக பொருளாளர் வெங்கட்ராமன் நச் பதில்!
முன்னர் சொன்னது போலவே பெண்களுக்கு மரியாதை தரும் கட்சி அதற்கு உதாரணம் முதலமைச்சரின் புதுமை பெண் திட்டம். இவை எல்லாத்தையும் விட எல்லா மதங்களுக்கும் மரியாதை தரும் ஒரே கட்சி திமுக மட்டும் தான்" எனத் தெரிவித்தார்.