திருநெல்வேலி: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் 8-வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. நெல்லை டவுன் மாநகராட்சி வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தகத் திருவிழாவில் தமிழ்நாட்டின் தலைசிறந்த பதிப்பகங்களான பாரதி புத்தகாலயம், கிழக்கு பதிப்பகம், விகடன் பதிப்பகம் உள்ளிட்டவைகளும், தமிழ்நாடு பாடநூல் கழகம், தமிழ்நாடு சிறைத்துறை மற்றும் நெல்லை மாவட்டத்தின் சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள் விற்பனையகம் பங்கேற்றன.
பொருநை விழா - 2025
மொத்தம் 127 அரங்குகள் அமைக்கப்பட்டு இலக்கியம், கவிதை, சிறுகதைகள், காவியம், சமய இலக்கியங்கள், சமையல் குறிப்பு, குழந்தைகளுக்கான அறிவுத்திறன் வளர்க்கும் வகையிலான புத்தகங்கள் என சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புத்தக திருவிழாவை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவரும், சாகித்ய அகாடமி விருதாளருமான வண்ணதாசன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து சிறைத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புத்தக உண்டியல் திட்டத்திற்கு புத்தகங்களையும் வழங்கினர். பின்னர் ஒவ்வொரு அரங்குகளாக பார்வையிட்டு புத்தகங்களையும் விலை கொடுத்து பெற்றுக் கொண்டனர். மேலும் மாணவர்கள் எழுதிய கதைசொல்ல போகிறேன், ஆசிரியர்கள் எழுதிய உங்களுடன் 5 நிமிடம் உட்பட 4 புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
புத்தக திருவிழா காலம்
தொடர்ந்து நடந்த விழாவில் பேசிய எழுத்தாளர் வண்ணதாசன், ''இந்த விழாவில் என்னை வைத்து தொடங்கி, படைப்பாளிக்கு மிகப்பெரிய சிறப்பான இடத்தை அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது பின்பனி காலம் முடிந்து இளவேனிற் காலம் தொடங்குகிறது. அதே போல் ஜனவரி முடிந்து பிப்ரவரி தொடங்கும் நிலையில் இந்த மாதம் முழுவதும் புத்தக திருவிழா காலமாக மாறி உள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் பிரமாண்ட தோல் கண்காட்சி; பிப்ரவரி 1 முதல் 3ம் தேதி வரை நடக்கிறது!
திருப்பூர், திருவாரூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் புத்தக திருவிழா தொடங்கி உள்ளது. இன்னும் நாமக்கல், பெரம்பலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் புத்தக திருவிழா தொடங்க உள்ளது. மாநிலம் முழுவதும் மண்டல வாரியாக இலக்கிய விழாக்கள், மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள் என நடத்தி வரும் நல்ல அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
புத்தக திருவிழா நடக்கும் இடம் ஒரு காலத்தில் வயல்வெளியாக இருந்தது. தற்போது வர்த்தக மையமாக மாறியுள்ளது. இங்கு புத்தக திருவிழா நடக்கிறது. இந்த இடத்தை நான் புத்தக வயலாக பார்க்கிறேன். மாணவர்கள் குறைந்தது மூன்று முறையாவது புத்தக கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை வாங்க வேண்டும்'' என அவர் கூறினார்.
நெல்லையின் பெருமைகள் ஏராளம்
முன்னதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பேசுகையில், ''நெல்லை சீமையின் அடையாளம் என்பது பொருநை நதி, ஐவகை நிலம் ஆகும். இரும்பின் பயன்பாடு நமது நெல்லை சீமையில் இருந்தது என முதலமைச்சர் ஆய்வு மூலமாக நிருபித்துள்ளார். நெல்லை இலக்கியம், படைப்பாளிகள், சாகித்ய விருதாளர்களை கொண்ட மாவட்டம். நெல்லை பசுமை மின்சாரத்தின் தலைநகரமாக உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் முதலமைச்சர் கங்கைகொண்டானில் அமைந்துள்ள பசுமை மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி வைக்க உள்ளார். நெல்லையின் பெருமைகள் ஏராளம் உள்ளன. இதனை இளைய சமூதாயம் உலகறிய கொண்டு செல்ல வேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.
10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், இலக்கியவாதிகள் மற்றும் பட்டிமன்ற நடுவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு அமர்வுகளும், மாணவ மாணவிகளின் திறன்களை வெளிப்படுத்தும் விதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.