சென்னை: சென்னை திருவொற்றியூர் நெட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் அதிமுக திருவொற்றியூர் இளைஞரணி பகுதி தலைவராகச் செயல்பட்டு வருகிறார். இவருடைய வயது 16 மகன் இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதியன்று இரவு காணும் பொங்கலை முன்னிட்டு வீட்டு வாசலில் அதிமுக நிர்வாகியின் மகன் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது நெட்டுக்குப்பம் மெயின் ரோட்டில் இருதரப்பினர் குடிபோதையில் மோதி கூச்சலிட்டுள்ளனர். அந்த சத்தம் கேட்டு, அதனைப் பார்ப்பதற்காக வீட்டு வாசலிலிருந்து சிறுவன் சிறிது தூரம் சென்றுள்ளார்.
அப்போது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த திருவொற்றியூர் திமுக மேற்கு பகுதி துணை செயலாளர் குமரவேல் சிறுவனை ஒருமையில் திட்டி தாக்கியதாகவும், அதில் சிறுவனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சிறுவனை உடனடியாக அவரது தந்தை சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். தற்போது சிறுவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு தனது நண்பர்களுடன் வந்த திமுக நிர்வாகி குமரவேல், சுகாதரனிடம் போலீசில் புகார் அளிக்கக் கூடாது என மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஸ்டான்லி மருத்துவமனையில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “மதுரை ஆட்சியர் என்ன விளக்கம் கொடுத்தாலும் அவர் செய்தது பெரும் தவறு” - அண்ணாமலை
மேலும், இச்சம்பவம் தொடர்பாக சிறுவன் அவருடைய தந்தை சுதாகருடன் சென்று எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் இதுவரை குமரவேல் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சுதாகர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அதிமுக நிர்வாகி சுதாகர், "தனது மகனை தாக்கிய குமரவேல் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும், அவர் மீது பல குற்ற வழக்குகள் இருந்து வந்ததும், கடந்த அதிமுக ஆட்சியில் தான் எந்தவித குற்ற சம்பவத்திலும் ஈடுபட மாட்டேன் எழுதிக் கொடுத்து சென்றதாகவும், ஆனால் தற்போது திமுகவில் பொறுப்புக்கு வந்த உடன் தனது மகனை தாக்கி, புகார் அளிக்கக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார்.
தற்போது, திருவொற்றியூர் பகுதியில் திமுக நிர்வாகி குடிபோதையில் சிறுவனைத் தாக்கிய சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவர் குடிபோதையில் தான் தாக்கினாரா? அல்லது அதிமுக நிர்வாகியின் மகன் எனத் தாக்கினார்? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.