கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு, பல்வேறு ஏழை, எளிய ஆதரவற்ற குடும்பங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலையிழந்து நிற்கும் தினக்கூலித் தொழிலாளர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் மனிதநேயம் கொண்ட பலர் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் ஒக்கூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சேக்கப்பன் செட்டியார், தனது கிராமத்தில் உள்ள 800 குடும்பங்களுக்குத் தலா 10 கிலோ வீதம் எட்டாயிரம் கிலோ அரிசி வழங்கி தன்னுடைய மனிதநேயத்தைக் காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ”நான் தற்போது மதுரையில் வசித்துவந்தாலும், எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் ஆகும். ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்து அல்லல்படும் ஏழை, எளிய மக்களுக்கு உதவிசெய்யலாம் என முடிவுசெய்தோம்.
தற்போது பல்வேறு இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை காரணமாக, எனது சொந்த ஊரில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி மூட்டைகளை வழங்கிவருகிறோம். மேலும், வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் மளிகைப் பொருள்களும் அனைத்து குடும்பங்களுக்கு வாங்கித்தர திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
பொதுமக்களின் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக வாகனம் மூலமாக மக்களிடம் நேரடியாகச் சென்று அரிசி மூட்டைகளை இவரும் இவர் மனைவி நாகம்மையும் வழங்கிவருகின்றனர்.
தள்ளாத வயதிலும் தன்னலம் பாராமல் இந்த மூத்தத் தம்பதி எடுத்துவரும் இந்த முயற்சிக்கு அக்கிராமத்தைச் சேர்ந்த பலரும் பாராட்டி, நன்றியைத் தெரிவித்துவருகின்றனர். மேலும், தம்பதியின் செயல் மனிதநேயத்தைப் போற்றும்விதமாக இருப்பதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ்: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சலவை தொழிலாளர்கள்