நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்ததில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், புதிய கால்நடைத் திட்டத்தின் மூலம் நாட்டு மாடுகள் அளிக்கும் தரமான பாலை ஏ-2 ரகமாகவும், ஜெர்ஸி பசுக்கள் அளிக்கும் பாலை ஏ-1 ரகம் என்றும் பிரித்து வைத்துள்ளனர். இது மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும். நாட்டு மாடுகளை அழிக்கும் நோக்கிலே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
செயற்கை கருத்தரிப்பு ஊசிகள் மூலம் மாடுகள் கருதரிக்க வைக்கப்படுகிறது. அந்நிய முதலாளிகளின் கருதரிப்பு ஊசிகளை சந்தைப்படுத்தவே இந்த புதிய கால்நடை வளர்ப்புக் கொள்கை பின்பற்றப்படுகிறது என்று கூறினார். மேலும், இந்த முறையை கொண்டு வருபவர்கள் தங்களின் பெண் பிள்ளைகளுக்கு ஏன் திருமணம் செய்து வைக்கிறார்கள்? அவ்வாறு திருமணம் செய்து வைக்காமல் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் மூலம் கருத்தரிக்க செய்ய முடியுமா என்றும் கேள்வியெழுப்பினார்.
முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், முதலீட்டாளர்களின் முதலீடுகளை பொறுத்து தான் இந்த பயணம் வெற்றி பெற்றதா என்பதை தீர்மானிக்க வேண்டும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய வேண்டியும் மாநில அரசு சார்பில் வெளிநாடு பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கி வருகிறார் என்று சாடினார்.
மக்களைப் பிரச்னைகளிலிருந்து திசை திருப்புவதே ஆட்சியாளர்களின் வேலையாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.