மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நெல்லை கண்ணன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ' பிரதமர், அமித்ஷா குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, பல இடங்களில் என் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட பேச்சு வழக்கிலேயே "ஜோலியை முடிக்கலியா?" என பேசினேன். அதன் பொருள் வேலை. அதாவது, அரசியலில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷாவின் ஆட்சியை முடிவுக்கு கொணரவில்லையா? எனும் நோக்கிலேயே அவ்வாறு பேசப்பட்டதே தவிர, உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நோக்கில் அல்ல. ஆனால், அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, என் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஆகவே, என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என அவரது மனுவில் கூறியிருந்தார்.
நெல்லை கண்ணன தாக்கல் செய்திருந்த இந்த மனு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திர முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை கண்ணன் ஜாமின் கோரிய வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்ய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் நெல்லை கண்ணன் மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்வது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஹெச். ராஜாவுக்கு மன்னிப்பு, நெல்லை கண்ணன் கையில் விலங்கா? - அழகிரி கேள்வி