மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில்," மதுரை மாவட்டத்தில் உள்ள ஏராளமான நீர்நிலைகளும், நீர்வழித் தடங்களும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால், போதியளவு தண்ணீரை சேமிக்க முடியவில்லை. பல கண்மாய்களில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. வைகையில் கழிவு நீர் கலந்து வருகிறது. ஆகவே, மதுரை மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள், நீர்வழித் தடங்களிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், தூர்வாரி தண்ணீரை தேக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் " என மனுவில் கூறியிருந்தார்.
இதே போல கேகே ரமேஷ்,"தமிழகத்தில் நீர்நிலைகள், குளங்கள் ஆகியவை நாள்தோறும் ஆக்கிரமிக்கப்பட்டு, வீடுகள், வணிகவளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் மழைநீர் சேகரிக்க முடியாமல் நிலத்தடிநீர் பாதாளத்துக்கு சென்றுவிட்டது. எனவே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். இதே கோரிக்கையை முன்வைத்து பலரும் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு, தமிழ்நாடு தலைமை செயலர் தலைமையில் பொதுப்பணித்துறை செயலர், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட துணை ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆகியயோருடன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்பிற்குட்பட்ட 13 மாவட்டங்களிலுள்ள நீர்நிலைகளை பாதுகாத்து பராமரிப்பது மற்றும் அவற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆலோசித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் வீரகதிரவனை நியமித்த நீதிபதிகள் அவரும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.