தூத்துக்குடி மாவட்டம் நாவலடையூரைச் சேர்ந்த கே. ருக்மணி (72), உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “நாங்கள் ஆதிராவிட வகுப்பை சேர்ந்தவர்கள். எனது இரண்டாவது மகன் ஆறுமுகராஜா (43) விவசாயம் செய்து வந்தார். வெள்ளூரைச் சேர்ந்த காசி உள்பட பலர் ஜாதி ரீதியாக எங்கள் குடும்பத்துக்கு பல்வேறு தொல்லைகளைக் கொடுத்துவந்தனர். இந்நிலையில் 2015 ஏப்ரல் 2ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையம் அருகே எனது மகன் ஆறுமுகராஜாவை, காசியுடன் கூட்டளிகள் சிலர் சேர்ந்து கொலை செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம் காவல் துறையினர் கொலை மற்றும் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். வன்கொடுமை சட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் காவல் துறையினர்தான் என் மகன் இறந்ததற்கு காரணம். எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது, காவல் பாதுகாப்பு வேண்டும் என அலுவலர்களுக்கு மனு அளித்தோம். ஆனால் காவல்துறை எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை. இதனால் எங்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு ஆறு வாரத்தில் ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
இதையும் படிங்க: பிப். 14இல் தமிழ்நாடு பட்ஜெட்: பேரவைச் செயலாளர் அறிவிப்பு