மதுரை தெற்கு வெளி வீதியில் பொதுமக்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வழங்கினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், "மருத்துவ குழு, மத்திய அரசின் ஆலோசனையைப் பெற்று ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார்.
கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன் வழங்கக் கூடிய சிறப்பு முகாம்கள் விரைவில் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். தற்போது, தமிழ்நாடு அரசின் கையிருப்பில் போதுமான அளவு உணவு பொருள்கள் உள்ளன. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவில்லமாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது வாழ்த்துகள்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணத்தை தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தியுள்ளார். வேதா இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் அலுவலகம் அமைய ஒரு போதும் வாய்ப்பில்லை. மேலும், இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து பேச இயலாது.
உலக சுகாதார நிறுவனம் கொடுத்த அறிவுரையைப் பின்பற்றி மாநில சுகாதார நிறுவனம் அதிக கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே பிற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடுதான் அதிக கரோனா சோதனைகளை செய்து வருகிறது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தேவையில்லாமல் தமிழ்நாடு அரசை குறை கூறுகிறார்" என்றார்.
இதையும் படிங்க: ஓசி சிகரெட் தராத டீ கடைக்கு தீ வைப்பு!