மதுரை : மீனாட்சி அம்மன் கோயிலில் மேம்படுத்தப்பட்ட ஓதுவார் பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்து, வீர வசந்தாராயர் மண்டப புனரமைப்பு பணிகளை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு இன்று(செப்.25) ஆய்வு செய்தார். அப்போது, அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
![அமைச்சர் சேகர் பாபு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-05-hrc-minister-sekar-babu-script-7208110_25092021133438_2509f_1632557078_478.jpg)
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, ”மீனாட்சி அம்மன் கோயிலில் 2018ஆம் ஆண்டு தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் ஸ்தபதிகளுக்கு பல முறை டெண்டர் அறிவித்தும் யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. எனவே, டெண்டர் ஒப்படைப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என ஆய்வு செய்து மூன்று ஆண்டுகளுக்குள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தாண்டு இறுதிக்குள் ரோப்கார் சேவை
வீர வசந்தராயர் மண்டப பணிகளின் காரணமாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அடுத்தாண்டு குடமுழுக்கு நடத்துவதில் ஆகமவிதியில் சிக்கல் உள்ளதா என ஆராய்ந்து பக்தர்களின் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும். அழகர்கோயில் பாதையை அகலப்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதால் அந்த பணிகள் விரைவுபடுத்தப்படும்.
![அமைச்சர் சேகர் பாபு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-05-hrc-minister-sekar-babu-script-7208110_25092021133438_2509f_1632557078_96.jpg)
சோளிங்கர், அய்யர் மலை கோயில்களில் இந்தாண்டு இறுதிக்குள் ரோப்கார் சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதனை தொடர்ந்து மேலும் ஐந்து கோயில்களுக்கு ரோப்கார் சேவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ள கோயில் நிலங்கள் ஒன்று கூட கடந்த ஆட்சியில் மீட்கப்படவிலை. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.கோயில் நிலங்களில் நியாயமான வாடகை நிர்ணயம் செய்வது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்து இறுதி செய்யப்படும்.
நேர்மையாக தமிழ்நாடு அரசு செயல்படும்
கோயில்களுக்கு பக்தர்களால் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட பல்வேறு ஆபரணங்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. அதில் தெய்வங்களுக்கு பயன்படுவதை நேரடியாகப் பயன்படுத்தவும், பயன்படுத்த இயலாத நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி, அதன் மூலம் கிடைக்கும் வைப்பு நிதியை கோயில் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
![அமைச்சர் சேகர் பாபு ஆய்வு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-05-hrc-minister-sekar-babu-script-7208110_25092021133438_2509f_1632557078_503.jpg)
தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களை மூன்று மண்டலங்களாகப் பிரித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் நகைகள் பிரிக்கப்பட்டு உருக்கும் பணிகள் நடைபெறும். கோயில்களில் பயன்படாமல் உள்ள எதுவும் தெய்வத்திற்கு பயன்படும் எனில் எந்த விமர்சனத்தையும் சந்திக்க தயார். நகைகளை உருக்கும் நடவடிக்கையில் எந்தவித லாப நோக்கும் இல்லாமல் நேர்மையாக, உண்மையாக, தூய்மையாக தமிழ்நாடு அரசு செயல்படும்" என்றார்.
இதையும் படிங்க : தனியார் வன பாதுகாப்பு சட்டத்திருத்த வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு