மதுரை: விருதுநகர் பந்தல்குடி பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “நான் விருதுநகர் பந்தல்குடியில் வசிக்கிறேன். நாங்கள் பூஜாரி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனது தந்தை செந்திலை, பந்தல் குடியைச் சேர்ந்த பெத்துக்குமார், மலர், அவரது தாயார் விஜயலட்சுமி உள்ளிட்டோர், பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.
வாகனத்தை வைத்து ஏற்றினர். இதில் எனது தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், பலமணிநேர தாமதத்திற்குப் பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வழி வகுக்கும் தவறான நோக்கத்துடன் காவல் துறை செயல்படுகிறார்கள்.
வருவாய்த்துறையில் பணியிலுள்ள ஒருவர் உதவியால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். திட்டமிட்டு எனது தந்தையை கொலை செய்துள்ளனர். எனது தந்தையை தொலைபேசியில் அழைத்து கொலைக்கு திட்டமிட்டு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.
பின்னர் அனைவரும் சேர்ந்து அவரை இரும்பு கம்பியால் தாக்கி, காரை ஏற்றி கொலை செய்துள்ளனர். முதலில் விபத்து என வழக்குப்பதிவு செய்தனர். எனது தந்தை செந்தில் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது , இது குறித்து விருதுநகர் காவல் கண்காணிப்பாளர், பந்தல் குடி காவல் ஆய்வாளர் ஆகியோர் வழக்கின் தற்போதைய விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டவரை மேஜரான பின்பு நீதிமன்றத்தில் விசாரிக்கலாம்' - சென்னை உயர் நீதிமன்றம்