மதுரை: புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு நாள்தோறும் காலையும், மாலையும் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தனர்.
முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 12ஆம் தேதியும், சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்றும் ( ஏப்ரல்.14) நடைபெற்றன. இன்று ( ஏப்ரல்.15) காலை தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.
விழாக்கோலம் பூண்டது தூங்கா நகரம்: இந்த தேரோட்டத்தை முன்னிட்டு கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் ஒரே வாகனத்தில் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டனர். அங்கு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடந்தன.
பெரிய தேரில் சுந்தரேசுவரரும், பிரியாவிடையும் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்தனர். சிறிய தேரில் மீனாட்சி அம்மாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு எழுந்தருளினார். சப்பரங்களில் விநாயகரும் சுப்பிரமணியரும் வலம் வந்தனர்.
தேரோட்டம் தொடங்கும் முன் அங்குள்ள கருப்பண்ணசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து பெரிய தேர் புறப்பட்டது. பிறகு சிறிது நேரம் கழித்து சிறிய தேர் புறப்பட்டது.
மாசி வீதிகளில் ஆடி அசைந்து வந்த மீனாட்சி: தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானைகள் சென்றன. இவற்றைத் தொடர்ந்து சிறிய சப்பரங்கள் சென்றன. முதலில் விநாயகரும் இரண்டாவதாக முருகனும், அதைத்தொடர்ந்து நாயன்மார்கள் சப்பரங்கள் சென்றன. இறுதியாக சண்டிகேசுவரர் சப்பரம் வந்தது.
இந்த தேர்கள் பிற்பகலில் கீழ மாசி வீதியில் உள்ள தேரடிக்கு வந்தடையும். இதனிடையே பல்லயிரக்கணக்கான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்து வணங்கினர். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பதிகம் பாடிச் சென்ற பக்தர்கள்: குறிப்பாக தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் மீனாட்சி- சுந்தரேசுவரர் பதிகம் பாடிச் சென்றனர்.
முன்னதாக காலை ஆறு முப்பது மணி அளவில் தேர் புறப்படத் தொடங்கும் என்று அறிவித்திருந்த நிலையில், தேர்ச் சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக முக்கால் மணி நேரம் தாமதமாக 7.15 மணி அளவில் தேர்கள் புறப்பட்டன.