மதுரை கல்மேடு பகுதியில் மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து வெளியேறும் உபரி நீரில் வளரும் கோரைப் புற்களை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர், மாநகராட்சி மூலம் குத்தகைக்கு எடுத்துள்ளதாகக் கூறி தான் பராமரித்து வரும் புற்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 31) கல்மேடு பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற மூதாட்டி வளர்த்த பசு அப்பகுதிக்கு சென்று புற்களை மேய்ந்த போது, குணசீலன் பசுவின் கழுத்துப் பகுதியில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதையடுத்து வலியால் துடிதுடித்த பசுவை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து பசுவை வெட்டியவர் மீது கால்நடைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மூதாட்டி லட்சுமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலே கதறி அழுதார் லட்சுமி.
இதன்பின்பு நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் பசுவின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் பசுவுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜெயசீலனை காவல் துறையினர் தற்போது தேடி வருகின்றனர். விலங்குகள் நலவாரிய அலுவலர்கள் சம்பவம் குறித்து பசுவின் உரிமையாளர் லட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: “அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்த பசுமாடு“- பரவசப்படுத்தும் காணொலி!