மதுரை: மேலூர் சருகுவலையபட்டியில் பட்டா நிலத்தில் கிரானைட் கற்கள் எடுக்க P.பெரியசாமி என்பவருக்கு அனுமதிக்கப்பட்டது.
ஆனால், அனுமதியை மீறி அருகிலுள்ள தனியார் மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தில் கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டதாக கீழவளவு காவல் துறையினர் பெரியசாமி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்து மேலூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பெரியசாமி, பி.பாபு(எ)கிருஷ்ணமூர்த்தி, அருண்ராஜா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தனர்.
இந்தநிலையில், இந்த மனு இன்று (பிப்.8) நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது அரசுத் தரப்பில், தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதிட்டார்.
அப்போது அவர், ஓடை புறம்போக்கு, அரசு நன்செய் நிலம் உள்ளிட்டப் பல இடங்களில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளனர்.
வாகனங்கள் செல்வதற்காக அரசு புறம்போக்கு நிலங்களைச் சேதப்படுத்தியுள்ளனர். ரூ.118 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப் பட்டுள்ளன என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கிரானைட் முறைகேடு குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறப்புக்குழு அமைத்து மாவட்டம் முழுவதும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு ஆடிட்டிங், வருமான வரித்துறை ரிட்டன் மற்றும் இதர ஆவணங்கள் உள்ளன.
அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதற்கு ஆவணங்களும், முகாந்திரமும் போதுமானதாக உள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது" எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கோயில் வாசலில் கிடந்த காளியம்மன் சிலை - போலீஸ் விசாரணை