மதுரை நடுமுதலைக்குளத்தைச் சேர்ந்த உக்கிரபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் சிலையை வைக்க உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் மதுரை மாநகராட்சி ஆணையர் அது குறித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
அதனடிப்படையில் மதுரை சிம்மக்கல் பகுதியில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் சிவன் கோயிலும், செல்லத்தம்மன் கோயிலும் அமைந்து இருப்பதால், எப்போதும் கூட்டமான பகுதியாகவே காணப்படுகிறது. தற்போது தேர்தல் நேரம் என்பதால் திமுகவை சேர்ந்தவர்கள் அந்தப் பகுதிக்கு அடிக்கடி வந்து சிலைக்கு மாலை அணிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
அரசியல் கட்சிகளின் கூட்டம் என்றாலே மது அருந்துவதும் பிரியாணி வழங்குவதும் இயல்பாகிவிட்டது. இதனால் பக்தர்கள் பாதிக்கப்படுவர். இதனால் சிம்மக்கல் பகுதி எப்போதும் அரசியல் பதற்றத்துடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகவே மதுரையில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சிலைகள் வைப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
பின்னர், அரசு தரப்பில் இது தொடர்பாக தகவல் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் சிலை வைப்பது தொடர்பான மற்றொரு வழக்குடன் இந்த வழக்கையும் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை (பிப். 24) ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.