ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, தலையடிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த போஸ் என்பவர் , உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'பரமக்குடி அருகே உள்ள தலையடிகோட்டை கண்மாய் குடிமராமத்துப் பணிக்கான உத்தரவை அதிகாரப்பூர்வமற்ற யாருக்கும் வழங்கக்கூடாது. மேலும் பொதுப்பணித்துறையின் நிர்வாகப் பொறியாளர், தலையடிகோட்டை கண்மாய் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்திற்குத் தேர்தலை நடத்தி, அதன் பின்பு குடிமராமத்துப் பணிக்கான ஒப்புதலை வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று (ஜூன் 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறையின் நிர்வாகப் பொறியாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.