இதுகுறித்து செல்லூரைச் சேர்ந்த குபேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்," காளவாசல் சந்திப்பில் இருந்து குரு தியேட்டர் சந்திப்பு வரை உள்ள அரசமரம், பூவரசம், நெட்டிலிங்க மரம் போன்ற பல வகை மரங்கள் வெட்டப்படுகின்றன. 138 மரங்கள் வெட்ட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரங்களை வெட்டாமல் பாலம் அமைக்க கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை.
ஆகவே மரங்களை வெட்டுவது தொடர்பாக முறையான விதிகளை உருவாக்கவும், மரங்களை வேரோடு எடுத்து வேறு இடத்தில் நடும் நவீன இயந்திரங்களை பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இது போன்ற பணிகளின்போது மரங்களையும் அவற்றில் இருக்கும் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களையும் கணக்கிட்டு பெரும்பாலான மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவும், அது தொடர்பான விதிகளை மீறும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தலைமை செயலர் அனைத்து மாவட்டங்களிலும் பரிசீலனை செய்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 21ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வை ஏன் இந்த அரசு திரும்பப் பெறக்கூடாது? - உயர் நீதிமன்றம் கேள்வி