மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில் கூறியதாவது; "உசிலம்பட்டி பஞ்சாயத்து யூனியன் 9ஆவது வார்டு உறுப்பினராக உள்ளேன். இங்கு மக்கள் தேவைக்காக பல பணிகளுக்கு அரசு அலுவலர்களிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித பலனும் இல்லை. ஆகஸ்ட் 3ஆம் தேதி உசிலம்பட்டி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்டு ரூ. 68 லட்சம் மதிப்பீட்டில், பல பணிகளுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டது. இதில் போர், மோட்டார் பம்ப், குளியல் தொட்டி, பேவர் ப்ளாக் ஆகிய பணிகள் அடங்கும்.
இதில் ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்றுதான் டெண்டர் காண விண்ணப்பம் கொடுக்க வேண்டும், ஆகஸ்ட் 13ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டு மாலை 5 மணி அளவில் டெண்டர் அறிவிக்க வேண்டும். மேலும், உசிலம்பட்டி பஞ்சாயத்து யூனியன் உள்பட பல உறுப்பினர்களுக்கு டெண்டர் நோட்டீஸ் கொடுக்கவில்லை. ஆனால், உசிலம்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் ரஞ்சனி சுதந்திரத்துக்கு (திமுக) மட்டும் டெண்டர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே டெண்டர் அறிவிக்கப்பட்டது.
மேலும், பணிகளுக்கு தேவையான அளவை விட மதிப்பீடு செய்து, டெண்டர் தொகையை அதிகமாக்கியுள்ளனர். எனவே, தற்போது நடந்த டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து. ஆகஸ்ட் 3ஆம் தேதி அறிவித்த டெண்டர் அறிவிப்பை ரத்து செய்து, புதிய டெண்டர் அறிவிப்பு விடப்பட்டு, முறையாக டெண்டர் நடைபெற அலுவலர்களுக்கு உத்தவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் டெண்டர் அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. மேலும், புதிய டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.