மதுரை: மதுரையைச் சேர்ந்த உலகஜோதி நூர் என்ற நபர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தனது மகன் சையது இஸ்மாயில். மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வந்தபோது, மாவட்ட அளவிலான வாலி பால் வீரராக இருந்துள்ளார். தற்போது இவர் மீது மதுரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ததால், இவரது குடும்பத்தினர் இவரை சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து உள்ளனர். அங்கு பணிபுரிந்தவர் செப்டம்பர் 3ஆம் தேதி மதுரை வந்திருந்தார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, இரவு நேரத்தில் வந்த மதுரை காவல்துறை ஆணையரின் சிறப்புப் பிரிவில் உள்ள எஸ்ஐ சிவா, காவலர் காமராஜ் உள்ளிட்ட சில காவலர்கள், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து என் மகனை கைது செய்ததோடு, எனது செல்போனையும் பிடுங்கிச் சென்று விட்டனர். மேலும் எனது மகனின் நண்பர்களான சேக் முகம்மது, விஜய், முகமது இஸ்மாயில் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர்.
தற்போது எனது மகன் மற்றும் அவனது நண்பர்களை சட்டவிரோதமாக கைது செய்து கடுமையாகத் தாக்கி கால்களை உடைத்துள்ளனர். மாஜிஸ்திரேட் முன்பு காவல் துறையினர் தன்னை சித்ரவதை செய்து கால்களை உடைத்ததாக வாக்குமூலம் அளிக்கப்பட்டது. காவல் துறையினரின் செயல் மனிதநேயமற்றது. மனித உரிமை மீறலாகும்.
என் மகனை துன்புறுத்தி கடுமையாகத் தாக்கியதற்கான மதுரை பழைய காவல்துறை ஆணையர் அலுவலக சிசிடிவி மற்றும் மதுரை கரிமேடு காவல் நிலைய சிசிடிவி ஆதாரங்கள், சம்பந்தப்பட்ட இடங்களில் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை சிசிடிவி காட்சிகளை இந்த வழக்கு முடியும் வரையில் பாதுகாக்க வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவானது நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது அலி ஜின்னா, வாலிபரை சட்டவிரோதமாக காவலர்கள் தூக்கிக் கொண்டு போய் அலுவலகத்தில் வைத்து கட்டையால் காலை உடைத்துள்ளனர். எனவே கரிமேடு காவல் நிலையத்திலும், பழைய காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும் உள்ள சிசிடிவி பதிவாகியுள்ளது. எனவே அதனை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.
அப்போது நீதிபதி காவல் நிலையத்திலும், பழைய காவலர் ஆணைய அலுவலகத்திலும் சிசிடிவி காட்சிகள் உள்ளதா என கேள்வி எழுப்பினார். அதற்கு காவல்துறை தரப்பில், மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
முறையாக சிசிடிவி கேமராக்கள் அனைத்து காவல் நிலையங்களும் இருக்க வேண்டும், முறையாக பராமரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில், எவ்வாறு இது போன்று பதிலளிக்கிறீர்கள் எனவும், அதற்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து மதுரை பழைய காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை மனுதாரர் கோரும் சம்பவ நாளன்று பதிவுகளை பாதுகாக்க வேண்டும் என மதுரை மாநகர காவல் துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி, சம்பவம் குறித்து காவல்துறை ஆணையர் தரப்பில் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: நியோமேக்ஸ் நிதி மோசடி விவகாரம்; உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்த மனு என்ன?