சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர், பிரிய விக்னேஷ். தனியார் விமானத்தில் துணை விமானியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, விமானத்தில் தமிழில் அறிவிப்பை வெளியிட்ட காணொலி வைரலாகி, தமிழ் மக்கள் பலரது பாராட்டையும் பெற்றது.
விமானங்களில் எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும் ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் அறிவிக்கப்பட்டு வந்த சூழலில், சில வாரங்களுக்கு முன்பு சென்னை முதல் மதுரை சென்ற விமானத்தில் பிரிய விக்னேஷ் என்ற துணை விமானி விமானத்தை, இயக்கி கொண்டிருந்தபோது, தான் துணை விமானி பேசுகிறேன் என்றும்; விமானம் சென்று கொண்டிருக்கும் இடங்களின் பெருமைகளையும் தமிழில் கம்பீரமான குரலில் அறிவித்தார். இதனை ஆச்சரியத்துடன் பார்த்த பயணிகள் காணொலி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்தக் காணொலி அதிகளவில் பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில், மதுரைக்கு மீண்டும் விமானம் இயக்கி வந்த பிரிய விக்னேஷ், மதுரையிலிருந்து சென்னை செல்லும்போது அவரது விமானம் முன்பு வரிசையாக நின்ற மதுரை விமான நிலையப் பணியாளர்கள் கையசைத்து தமிழில் அறிவிப்பு வெளியிட்டமைக்கு நன்றி தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்வை படம்பிடித்த விக்னேஷ், "மதுரைக்காரங்க... மனசை ரொம்ப நெகிழ வைச்சுட்டாங்க" என ஃபேஸ்புக்கில் பதிவிட்ட காணொலி ட்ரெண்டாகி வருகிறது.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு, தமிழைப் போற்றுபவர்களையும் போற்றத்தெரியும் என்பதற்கு ஒரு சோறு பதம் உதாரணமாகி இருக்கிறது, இந்நிகழ்வு!
இதையும் படிங்க: சிங்கப்பூர் விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்த துணை விமானி: பயணிகள் மகிழ்ச்சி!