மதுரை: திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த பைசல் கனி என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "திருநெல்வேலி மாநகராட்சியில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இதன் மூலம் வரி வசூல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக, வார்டு மறு வரையறைச்சட்டம் 2017-ன் படி திருநெல்வேலி மாநகராட்சியில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.
மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள மக்களை தச்சநல்லூர் மண்டலத்தில் உள்ள வார்டுகளோடு இணைத்து உள்ளனர். இதனால் அவர்களுக்கு சட்டப்பேரவைத் தொகுதியும் மாறுபடுகிறது. மேலும் 7 கிலோ மீட்டர் தூரம் சென்று வாக்களிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலை செயல்படுத்தத் தடைவிதிக்க வேண்டும்
இது குறித்து நாங்கள் எங்கள் எதிர்ப்பு கருத்துகளை மனுவாக கொடுத்தோம். ஆனால், இதை ஏற்காமல், 2021ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். இது ஏற்புடையது அல்ல.
எனவே, வார்டு மறுவரையறை குறித்து மனுதாரரின் கருத்துகளை பரிசீலனை செய்யாமல், திருநெல்வேலி மாநகராட்சியில் இறுதி வாக்காளர் பட்டியலை செயல்படுத்தத் தடை விதிக்க வேண்டும்'' என மனுவில் கூறி உள்ளார்.
இந்த வழக்கானது நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க, அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: கரோனா தொற்று தடுப்பு விதிகளை பின்பற்றி விநாயகர் சிலைகளை கரைத்து கொள்ள அனுமதி