மதுரை: மதுரை மாவட்டத்தின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவான தொகுப்பினை மதுரை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் (MADITSSIA - மடீட்சியா) தலைவர் லட்சுமிநாராயணன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு வழங்கினார்.
அவர் அளித்த பேட்டியில் , "மதுரையில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் டைடல் பார்க் குறித்து கடந்தாண்டு தமிழக முதலமைச்சர் அறிவிப்புச் செய்தார். கடந்த 2000ஆம் ஆண்டில் தான் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் ஐடி பார்க் குறித்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் மிகவும் பின் தங்கியிருந்த தரமணி, ஓஎம்ஆர் பகுதிகளெல்லாம் இன்றைக்கு உலகத்தரம் வாய்ந்த அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளன.
அதேபோன்று ரூ.600 கோடி மதிப்பீட்டில் மதுரையில் அமையவுள்ள டைடல் பார்க், புதிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும். மதுரை மாவட்டம் இலந்தைக்குளம் எல்காட் முழுமை பெற்று நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. அதேபோன்று வடபழஞ்சியிலும் தற்போது வேக வேகமாக முழுமைப்படுத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட டைடல் பார்க் திட்டத்தால் 10 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவார்கள். மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பொறியியல் கல்லூரியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். ஆனால், அறிவிப்புச் செய்த ஆரம்ப நிலையிலேயே இந்தத் திட்டம் ஏன் உள்ளது என்று பார்த்தால், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக நான் அறிகிறேன்.
மதுரை மாநகராட்சி இந்தப் பணியை நிறைவு செய்துவிட்டால், மற்ற பணிகள் விரைவாக நடைபெறும் என நம்புகிறேன். வருகின்ற 2030ம் ஆண்டுக்குள் 'ஒன் டிரில்லியன் டாலர்' என்ற பொருளாதாரத் திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். இதனை அடைவதற்கு டைடல் பார்க் போன்ற திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் பிற தொழில் முனைவோருக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
இளம் தொழில் முனைவோருக்கான வாடகையை சதுர அடி ஒன்றுக்கு 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை நிர்ணயம் செய்ய வேண்டும். இதனால் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெரிய ஐடி நிறுவனங்கள் வரும்போது, கணினிப் பொறியியல், ஃபர்னிச்சர்ஸ் போன்ற, ஐடி தொழிலைச் சார்ந்த பிற தொழில்களும் வளரும். மதுரை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற வேண்டுமெனில் டைடல் பார்க் வர வேண்டும் என்பது மிக முக்கியம்.
மதுரை - தூத்துக்குடி தொழில் வழிச்சாலை: மதுரை-தூத்துக்குடி தொழில் வழிச் சாலை என்பது மதுரை மடீட்சியாவைப் பொறுத்தவரை தமிழக அரசிடம் நீண்ட நாட்களாக விடுக்கப்பட்டு வரும் கோரிக்கையாகும். இது வெறும் அறிவிப்பு நிலையிலேயே உள்ளது. ஒவ்வொரு 20 கி.மீ க்கு இடையில் 500 ஏக்கரில் தொழில்பேட்டை அமைந்தால், மதுரையின் வளர்ச்சி மிக விரைவாகும்.
மதுரையைப் பொறுத்தவரை தற்போது கப்பலூர், கே.புதூர் மற்றும் உறங்கான்பட்டி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே தொழிற்பேட்டைகள் உள்ளன. ஆனால், இந்த மூன்றிலும் தற்போது செயல்பட்டு வரும் நிறுவனங்களைக் கணக்கெடுத்தால் மொத்தமாக 500ஐ தாண்டாது.
ஆனால், ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் மட்டுமே சிறிய அளவிலான 2 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களெல்லாம் வெளியில் வர வேண்டுமானால், சிட்கோ போன்று நிறைய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட வேண்டும். தமிழக அரசு தனியார் தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவது அவசியம்.
இதற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க அரசு முன் வர வேண்டும். இல்லாவிடில் 90 சதவிகிதம் மானியம் வழங்க வேண்டும். சிட்கோ மூலமாக தொழிற்பேட்டைகள் நிறைய உருவாக வேண்டும். அத்துடன் மதுரை-தூத்துக்குடி ரயில் தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான செயல்திட்டமும் அவசியம். மதுரை விமான நிலையம், தூத்துக்குடி துறைமுகம் ஆகியவை இருக்கின்ற காரணத்தால், இந்த தொழில் வழிச் சாலையின் வளர்ச்சியே அபரிமிதமாக இருக்கும். தமிழக அரசு இதனை சீரிய கண்ணோட்டத்துடன் அணுகி செயல்படுத்த முன் வர வேண்டும்.
பெருநகர் பெருந்திட்டங்கள்: பெருநகர் பெருந்திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு மிகுந்த முனைப்புக் காட்டி வருகிறது. ஆனால் மதுரையைப் பொறுத்தவரை, வெறும் 3 சதவிகிதம் மட்டுமே தொழிற்சாலைகளுக்கான நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இது போதுமானதல்ல. மதுரையைச் சுற்றி நிறைய கிராமங்கள் உள்ளன. அவற்றில் விவசாய நிலங்களே அதிகமாக உள்ளன. அந்த விவசாய நிலங்களை தொழிற்சாலைகளுக்கான நிலங்களாக மாற்ற வேண்டும்.
இதற்கு நகர மற்றும் ஊரமைப்பு இயக்குநரகத்தின் அனுமதி வேண்டும் (ETCP - Enacted Town and Country Planning). ஆனால், இந்த அனுமதியைப் பெறுவது அத்தனை எளிதான விசயம் இல்லை, மிகுந்த காலதாமதம் ஆகிறது. ஆகையால் தமிழக அரசே தொழிற்சாலைகளுக்கான நிலம் என அறிவிப்புச் செய்தால் சிறப்பாக இருக்கும். இதனால் தொழில்கள் வளர்வதற்கும், நகரத்தில் உள்ள தொழில்கள் அனைத்தும் தொழிற்பேட்டைகளை நோக்கி நகர்வதற்கும் வாய்ப்பு ஏற்படும்.
சிப்காட் (SIPCOT): மதுரையில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மானாமதுரை மற்றும் நிலக்கோட்டையில் மட்டுமே சிப்காட் உள்ளன. தமிழ்நாட்டிற்குள் வேறெங்கும் கிடையாது. ஆகையால் இந்த சிப்காட் மதுரைக்குள் உருவாக்கப்பட வேண்டும். பெரிய நிறுவனங்கள் சிப்காட்டில் அமைக்கப்பட்டால் அவற்றைச் சார்ந்து சிறு தொழில்கள் வளர்ச்சியடையும். இதற்கான பணிகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
சிறு மற்றும் குறுந்தொழில்கள்: மதுரையில் சிறு மற்றும் குறுந்தொழில்கள் தொடங்குவதில் ஏகப்பட்ட நடைமுறைகள் உள்ளன. இவற்றையெல்லாம் எளிமைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தொழிலுக்குமான வழிகாட்டிகளை உருவாக்கி, அவற்றை அனைவருக்கும் வழங்க வேண்டும். அப்போதுதான் தொழில் நிறுவனங்களைத் தொடங்க வரும் இளைஞர்களுக்கு ஊக்குவிப்பாக அமையும்.
பொதுவாக ஒரு தொழில் குறித்த தரவுகள் வேண்டுமென்றால், ஒட்டுமொத்தமாக கிடைப்பது சிரமமாக உள்ளது. இதற்காக தமிழக அரசே தரவுகளை உருவாக்குவதுடன், இதற்கான மென்பொருளையும் தமிழக அரசு உருவாக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: உடற்பயிற்சி கூடங்களில் விற்கப்படும் பவுடர்களை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் சாப்பிட வேண்டாம்: மருத்துவர் கூறும் அறிவுரை என்ன?