மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கற்பகநகர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன். இவர் வீட்டிற்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு யோகா ஆசிரியை ஒருவர் வந்துள்ளார். அந்த ஆசிரியையிடம் ஹரி கிருஷ்ணன் தவறாக நடக்க முயன்றுள்ளார். அதற்கு அந்த பெண் உடன்படாததால் அந்த பெண்ணை அடித்து கொலை செய்து வீட்டிலேயே ஹரி கிருஷ்ணன் புதைத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தெரியவந்தையடுத்து விசாரணை மேற்கொண்டனர். இதனால் மாட்டிக்கொள்வோம் என நினைத்து ஹரிகிருஷ்ணன் தனது வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஹரிகிருஷ்ணனின் வீட்டின் அக்கம் பக்கத்தினர் திருமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து காவல் துறையினர் ஹரிகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.