அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ள 'ஜீன் எக்ஸ்சான் ஸ்கிப்பிங் தெரபி' மூலம் உலகம் முழுவதும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 27 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அதில் மதுரையைச் சேர்ந்த 10 வயதான சிறுவனுக்கு இந்த சிகிச்சை இந்தியாவிலேயே முதல் முறையாக அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையிலுள்ள கென்மேக்ஸ் என்ற தனியார் மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவர் ராகவன் கடல்ராஜா, வியோண்டிஸ் 53 (Vyondys 53) எனப்படும் மருந்தை அச்சிறுவனுக்கு வழங்கி சாதனை படைத்துள்ளார்.
ஜீன் எக்ஸ்சான் ஸ்கிப்பிங் தெரபி
அமெரிக்காவில் 'ஜீன் எக்ஸ்சான் ஸ்கிப்பிங் தெரபி' என்ற சிகிச்சை பெற்ற நோயாளிகள் உடல் நலத்தில் முன்னேற்றம் கண்டுள்ளனர். தசை சிதைவினால் ஏற்படும் மூச்சுத்திணறல் இந்த சிகிச்சையினால் நீங்குகிறது. அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தை தலைமையிடமாக கொண்டுள்ள ஜாகோ ஹெல்த் நிறுவனம் நவீன டிஜிட்டல் தெரபி வழங்கிவருகிறது. இதனுடன் மதுரை கென்மேக்ஸ் மருத்துவமனை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
பிறவியிலேயே டிஸ்ட்ரோபின் (Dystrophin) எனப்படும் வேதிப்பொருள் உடலில் சுரக்காததால் டுஷேன் மஸ்குலர் டிஸ்ட்ரஃபி ஏற்படுகிறது. இந்நோய் பெரும்பாலும் ஆண் குழந்தைகளையே பாதிக்கும். இந்த பிறவிக்கோளாறினால் தசைச்சிதைவு ஏற்பட்டு நடமாட முடியாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு நாளடைவில் உடலின் எல்லா தசைகளும் செயலிழந்துவிடுகிறது.
இறுதியில் இருதயமும், நுரையீரலும் பாதிப்பிற்குள்ளாகும் போது உயிரிழக்க நேரிடுகிறது. அதிகபட்சம் 35 வயது வரையே இத்தகைய நோயாளிகள் உயிர் வாழ்கிறார்கள். 2019ஆம் ஆண்டில் வியோண்டிஸ் 53 எனப்படும் மருந்திற்கு சோதனை முயற்சிகளில் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அனுமதி வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட 24 குழந்தைகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டு, நம்பிக்கையூட்டும் பலன்கள் வகையில் இருந்தது.
இந்தியாவில் முதல்முறையாக மதுரையில் சிகிச்சை..
3.5 வயதில் தசைச்சிதைவு கண்டறியப்பட்டு, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மதுரை கென்மேக்ஸ் மருத்துவமனையில் தசைச்சிதைவு நோய்க்கான சிகிச்சையை மேற்கொண்டு வரும், பெயர் வெளியிட விரும்பாத இந்த ஒரு இளம்நோயாளியின் பெற்றோர், மருத்துவர் ராகவன் பரிந்துரையின் பேரில் ஜீன் எக்ஸ்சான் ஸ்கிப்பிங் தெரபி சிகிச்சைக்கு ஒப்புதல் அளித்தனர். அமெரிக்காவில் இருந்து வியாண்டிஸ் (Vyondys 53) மருந்தினை தருவித்ததுடன் முறையான பயிற்சி பெற்ற குழுவுடன், இந்த நோயாளிக்கு வெற்றிகரமாக வழங்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய மருத்துவர் ராகவன்,’டுஷேன் மஸ்குலர் டிஸ்ட்ரஃபி 5000 அல்லது 3500 பேரில் ஒருவருக்கு, குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக்கோளாறாகும். கடந்த காலங்களில் இந்த நோய்க்கு தீர்க்கமான சிகிச்சையோ, நோய் தானாக குணமாவதற்கான வாய்ப்போ இல்லாமல் இருந்தது. வியோண்டிஸ் 53 என்ற மருந்து 24 அமெரிக்க குழந்தைகளுடன் சேர்த்து உலகெங்கிலும் வெறும் 26 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் முதன்முறையாக இந்த 10 வயது சிறுவனுக்கு கென்மேக்ஸ் மருத்துவமனை இந்த சிகிச்சையை, ஜாகோ ஹெல்த் நிறுவனத்துடன் சேர்ந்து வழங்கியுள்ளது. சிகிச்சை தொடங்கியது முதல் இச்சிறுவனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது’என்றார்.
ஜாகோ ஹெல்த் நிறுவனத்தின் மருத்துவ இயக்குநர் ஷ்யாம் ராமமூர்த்தி, ’இந்திய மருத்துவத்துறையின் இந்த முக்கியமான மைல்கல்லில் இணைந்திருப்பது பெருமிதம் அளிக்கிறது. ஜாகோ ஹெல்த்தின் அதி நவீன டிஜிட்டல் நியூரோ தெரபியுட்டிக்ஸ், இந்த இளம் சிறுவனின் நரம்பு மண்டலத்தின் திறனை அளவிட்டு, அவரின் உடல்தசைகள் மறு சீரமைப்பு பெறவும், மிகவும் செயல்திறனுள்ள புனரமைப்பு சிகிச்சைகளையும் வழங்கி வருகிறது’ என்றார்.
இதையும் படிங்க:ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் நோயாளி போராட்டம்!