சென்னை: ஈஷா யோகா மையம் நடத்தும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
ஈஷா யோகா மையம் வரும் 26, 27ஆம் தேதி தேதிகளில் நடத்தவுள்ள மகாசிவராத்திரி நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கூடாது என கோவையை சேர்ந்த சிவஞானம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், "வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா மையம் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி நிகழ்ச்சி நடத்தி வருகிறது. மகாசிவராத்திரியின் போது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் அங்கு கூடுகின்றனர். இதனால் வெள்ளியங்கிரியின் வனச்சூழல் பாதிக்கப்படுகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு ஈஷா யோகா மையம் நடத்திய சிவராத்திரி நிகழ்வில் 7 லட்சம் பேர் ஒரே நேரத்தில் கூடினர். இதனால் ஏற்பட்ட கழிவு நீர் அதிகளவில் வனப்பகுதிகளில் வெளியேற்றப்பட்டது. எனவே, வனப்பகுதியின் சூழல் சீர்கேடு நேரிட்டதோடு மட்டுமல்லால் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, 26,27 ஆம் தேதிகளில் மகாசிவராத்திரி நிகழ்ச்சி நடத்த ஈஷாவுக்கு அனுமதி வழங்க கூடாது,"என குறிப்பிட்டிருந்தார்.
அவரது மனு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், என். ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "எந்த விதிகளையும் கடைபிடிக்காமல் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கூடாது,"என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் சான்றிதழ் கிடைப்பதில் காலதாமதம்; 400 உதவி மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!
ஈஷா யோகா மையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "விதிமீறல்கள் இல்லை என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளித்துள்ளது. மனுதாரின் நிலத்தை ரூ.100 கோடிக்கு ஈஷா மையம் வாங்காததால் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்,"என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், "ஈஷா யோகா மையம் நடத்தும் மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் விதிமீறல்கள் உள்ளதா? என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளிக்க வேண்டும்,"என உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "ஈஷா யோகா மையத்தில் எந்த விதிமீறல்களும் இல்லை,"என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "குறிப்பிட்ட பகுதியில் நிகழ்ச்சி நடத்துவதால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? பொதுமக்கள் பாதிக்கும் வகையில் சாலை ஓரங்களிலும் அல்லது குடியிருப்பு பகுதியில் ஒலிப்பெருக்கிகளை ஈஷா மையம் பயன்படுத்துகிறதா?,"என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினர்.
"கழிவு நீர் மேலாண்மை, ஒலி மாசுவை தவிர்க்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க ஈஷா மையத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனவே மனுவை ஏற்க எந்த முகாந்திரமும் இல்லை,"என்று கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி உத்தரவிட்டனர்.