கண்களிலும், கன்னத்திலும் மை வைத்தே நமது குழந்தை பருவம் தொடங்குகிறது. அதை தொடர்ந்து பள்ளி, கல்லூரி என பெண்களுக்கு கூடுதல் அழகு சேர்ப்பதும் கண் மை தான். பழங்காலத்தில் இருந்தே தினசரி கண்ணுக்கு மை இட்டுக்கொள்ளும் பழக்கம் நமது கலாச்சாரத்தில் தொடர்ந்து வருகிறது. அப்படி, அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த கண் மையை வீட்டிலேயே இயற்கையாக எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
- பாரம்பரிய முறையில் கண் மை தயாரிப்பு..
தேவையான பொருட்கள்:
- அகல் விளக்கு - 2
- நல்லெண்ணய் - விளக்கு ஏற்றப் போதுமான அளவு
- தடிமனான திரி - 2
- எவர்சில்வர் தட்டு அல்லது மூடி - 1
- எவர்சில்வர் டம்ளர் - 2
- விளக்கெண்ணெய் - தேவையான அளவு
கண் மை செய்முறை: 2 அகல் விளக்குகளையும் ஏற்றி எரிய விட்டு அதன் நடுவில் இரண்டு டம்ளர்களை வைத்து அவற்றின் மீது எவர்சில்வர் தட்டால் மூட வேண்டும். சுமார் அரை மணி நேரம் விளக்குகளை எரிய விட்டால் மூடியின் மீது கணிசமான அளவு புகைக்கரி படியும். இப்போது தேவையான அளவு புகைக்கரி கிடைத்ததும் விளக்குகளை அணைத்து மூடியை நீக்குங்கள்.
தட்டில் சுடு ஆறியதும், புகைக்கரியை ஸ்பூனால் சுரண்டி ஒரு சிறிய கிண்ணத்தில் சேகரித்துக்கொள்ளுங்கள். இப்போது, இந்த புகைக்கரியுடன் 1/2 டீஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டு நன்கு பசை போல கலந்தால் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தாமல் இருக்கும் கண் மை கிடைக்கும். இது, குழந்தைகளுக்குப் பயன்படுத்தத் தோதான ஒன்றாகும். விளக்கெண்ணெய் சேர்ப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது.
- பீ வேக்ஸ் (Beewax) பயன்படுத்தி கண் மை தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:
- பீ வேக்ஸ் - 1 ஸ்பூன்
- புகைக்கரித்தூள் - 1 ஸ்பூன்
- விளக்கெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் நிரப்பி கொதிக்க விடவும். பின்னர், இந்த கொதிக்கும் நீரில் எவர்சில்வர் கிண்ணத்தை மிதக்க விடவும். கிண்ணம் சூடானதும், பீ வேக்ஸ் மற்றும் புகைக்கரித்தூள் சேர்த்து சூடாக்கவும். பீ வேக்ஸ் உருக தொடங்கும் போது கொஞ்சமாக விளக்கெண்ணெயை மெதுவாக அந்த கலவையில் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கண்மைக்கு நீரில் கரையாத தன்மை அதிகரிக்க வேண்டும் என்றால் பீ வேக்ஸின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம்.
திக்னஸ் போதுமென்றால், கிண்ணத்தை பாத்திரத்தில் இருந்து இறக்கி, சூடு ஆறியதும் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் ஜாரில் நிரப்பிக் கொள்ளவும். பின்னர், ஓர் இரவு முழுவதும் ஃப்ரிஜ்ஜில் வைத்து மறுநாள் கண்களுக்கு இட்டுக் கொள்ளலாம். தேன் கூட்டில் இருந்து எடுக்கப்பட கூடிய ஒரு வகை மெழுகு (பீ வேக்ஸ்) தோல் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறது NCBI.