சென்னை: மத்திய அரசின் நிதி நெருக்கடி இருந்தாலும் மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உயிர்காக்கும் மருந்துகளை சந்தை விலைவிட 75 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கும் முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கூட்டுறவுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் முதல்வர் மருந்தகம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. முதல்வர் மருந்தகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:
கல்வியும் மருத்துவமும் தான் அரசின் இரு கண்கள். கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுக்கவும் சிறந்த மருத்துவ கட்டமைப்பை உருவாக்கி அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைக்கும் வகையில் உறுதி செய்யவும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.ஜென்ரிக் மருத்துகளையும் பிற மருந்துகளையும் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய வகையில் முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் துவங்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். அந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது அரசு சாதாரண சாமானிய மக்களுக்கான அரசு என்பதற்கு அடையாளம் தான் இந்த முதல்வர் மருந்தக திட்டம்.

பொதுமக்கள் தங்களுக்கான மருந்துகளை அதிகம் விலை கொடுத்து வாங்கும் நிலையை மாற்ற வேண்டும். அவர்களின் சுமையை குறைக்க வேண்டும் என்று இந்த மருந்தகங்களை துவங்க திட்டமிட்டோம். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகளுக்கு தொடர்ந்து மருந்துகள் வாங்க வேண்டி இருப்பதால் அதிகமான செலவாகிறது என்று பலர் கவலைப்பட்டதால், இந்த மருந்தகங்களை திறக்க நாங்கள் திட்டமிட்டோம். சொன்னது போலவே இன்றைக்கு ஆயிரம் மருந்தகங்களை திறந்து இருக்கிறோம். இந்த மருந்தகங்களை சிறப்பாக செயல்படுத்த மருந்தாளர்களுக்கும் கூட்டமைப்புகளுக்கும் மானியம் மற்றும் தேவையான கடன் உதவிகளை அரசு வழங்கி உள்ளது.
இந்த மருந்தகங்களை அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி பார்ம் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தொழில் முனைவோருக்கு 3 லட்சம் ரூபாயும் கூட்டுறவு சங்கமாக இருந்தால் இரண்டு லட்சம் ரூபாயும் மானியமாக வழங்கப்பட்டது. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரொக்கமாகவும் மருந்துகளாகவும் வழங்கப்படுகிறது. சென்னை சாலிகிராமத்தில் மருத்துவ சேவை கழகத்தால் மத்திய மருந்து கிடங்கு அமைக்கப்படிருக்கிறது. 38 மாவட்டங்களில் மாவட்ட மருந்து கிடங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட மருந்து கிடங்குகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திமுக அரசு பதவி ஏற்கும் போது கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. அப்பொழுது முதல் தவணை கொரோனா தடுப்பூசியை குறைவான நபர்களே போட்டிருந்தனர். அரசு பொறுப்பேற்ற பின்னர் மக்களிடம் விரைவாக தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆறு மாதத்தில் அதிக அளவில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியை போட வைத்ததுடன், பூஸ்டர் தடுப்பூசியும் போட வைத்தோம்.
மருத்துவமனையை தேடி மக்கள் செல்லக்கூடிய நிலையை மாற்றி மக்களை தேடி மருத்துவம் செல்லும் காலத்தை உருவாக்கி இருக்கிறோம். இரண்டு கோடிக்கு அதிகமான மக்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை அளித்திருக்கிறோம். அனைத்து திட்டங்களை பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு இடையே செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசு என்று சொல்லக்கூடிய ஒன்றிய அரசின் நெருக்கடி இருந்தாலும் அந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்த திட்டம் எந்த நோக்கத்திற்காக துவங்கப்பட்டதோ அந்த நோக்கம் சிறிதும் சிதையாமல் இன்னும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது துவங்கியிருக்கக் கூடிய ஆயிரம் மருந்தகங்கள் முதற்கட்டம்தான். அடுத்தடுத்த கட்டங்களில் இதன் எண்ணிக்கையை அதிகப்படுத்த போகிறோம். நமது திட்டங்களால் வளமான தமிழ்நாடு உருவாகும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.