திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த பிரியா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில் " கடந்த 2018 ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு கணினி ஆசிரியர் பணிக்காக, 814 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதை தொடர்ந்து கடந்த மார்ச் 1 ஆம் தேதி, ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில் ஜூன் 23 ஆம் தேதி அன்று கணினி ஆசிரியர் பணியிடத்திற்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த முடிவு செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 119 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அதில் இணைய சேவை பாதிக்கப்பட்டு பலர் தேர்வு எழுத முடியாமல் போனது.
இதையடுத்து ஆசிரியர் தேர்வாணையம், ஜூன் 24 ஆம் தேதி அன்று வெளியிட்ட அறிவிப்பில், இணையசேவை பாதிக்கப்பட்டதால் தேர்வெழுத இயலாமல் போனவர்களுக்கு 2 ஆம் கட்டமாக ஜூன் 27 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என் அறிவித்துள்ளது. இது போன்று இரண்டு கட்டமாக தேர்வு நடத்தினால், தேர்வில் குழப்பங்கள் ஏற்படும் மற்றும் தேர்வு எழுதுவோர் முறைகேட்டில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது.
எனவே அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வில் எவ்வித முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க, ஜூன் 23 ம் தேதி நடைபெற்ற தேர்வை ரத்து செய்தும், ஜூன் 27 ஆம் தேதி நடக்க இருக்கும் தேர்வுக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.
மேலும் புதிய அறிவிப்பை வெளியிட்டு அதனடிப்படையில் தேர்வு நடத்தி கணினி ஆசிரியர்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக மனுதாரர் ஏன் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முறையீடு அல்லது
புகார்மனு அளிக்கவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.