மதுரை: வீட்டின் உரிமையாளருடன் வாடகை சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையில் நடவடிக்கை எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக காவல் ஆய்வாளர் மீது மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த எஸ்.வெங்கட்ராமன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், நான் மதுரை எஸ்.எஸ்.காலனி பாரதியார் 5வது தெருவில், சுப்பிரமணியன் தாயார் பிரேமாவதி என்பவர் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்து வருகிறேன். வாடகை தொடர்பாக எனக்கும் பிரேமாவதிக்கும் இடையே 2018-ல் வாடகை ஒப்பந்தம் கையெழுத்தானது. நான் முறையாக வாடகை செலுத்தி வருகிறேன். பிரேமாவதி 2020-ல் இறந்தார். அதன் பிறகு எனக்கும் சுப்பிரமணியன் வாடகை உயர்வு தொடர்பாகப் பிரச்சினை ஏற்பட்டது.
இந்நிலையில் சுப்பிரமணியன் கடந்த மாதம் அடி ஆட்களுடன் என் வீட்டிற்கு நுழைந்தனர். இதையடுத்து அவசர போலீசாருக்கு தகவல் அளித்தேன். போலீசார் வந்ததால் அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறினர். இது குறித்து எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்தேன்.
காவல் ஆய்வாளர் என் புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் கட்டப்பஞ்சாயத்து செய்தார். வாடகைப்பாக்கியை கொடுத்து விட்டு வீட்டை காலி செய்யுமாறு என்னை மிரட்டினார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. சுப்பிரமணியன் புகாரின் பேரில் என்னைத் தொந்தரவு செய்யக்கூடாது என எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.இளங்கோவன், மனுதாரர் வாடகை பாக்கியைச் செலுத்திவிட்டு வீட்டை காலி செய்யத் தயாராக இருக்கும் நிலையில் மனுதாரருக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் இடையிலான பிரச்சினையில் காவல் ஆய்வாளர் தலையிட்டது துரதிர்ஷ்டவசமானது.
உரிமையில் பிரச்சினையில் போலீசார் தலையிடக்கூடாது என நீதிமன்றம் மீண்டும் மீண்டும் உத்தரவிட்ட போதிலும், காவல் ஆய்வாளர் தலையிட்டுள்ளார். அவர் மீது மதுரை துணை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.