தேனி, பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த அமாவாசை என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு சீராய்வு மனுவினைத் தாக்கல் செய்தார். அதில், " மதுரை ஆவினில் இருந்து தேனி ஆவின் தனியாகப் பிரிக்கப்பட்டு, அதற்கான அரசாணை கடந்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
எவ்வித விதியையும் பின்பற்றாமல் ஓ. ராஜா தேனி ஆவின் சேர்மனாக நியமிக்கப்பட்டார். இடைக்கால குழுவும் நியமிக்கப்பட்டது. நியமனத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கின் இறுதித் தீர்ப்பில், தேனி ஆவினின் சேர்மன் ஓ. ராஜா மற்றும் இடைக்கால குழு நியமிக்கப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மேலும் விதிப்படி சேர்மன் மற்றும் குழு நியமனம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றாமல் கடந்த ஜனவரி 30ஆம் தேதி தேனி ஆவின் சேர்மனாக ஓ. ராஜா தலைமையில் இடைக்கால குழு நியமித்து பதவியேற்றது. இந்த நியமனம் உயர் நீதிமன்றம் விதித்த விதிப்படி நடக்கவில்லை. எனவே, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சீராய்வு செய்ய வேண்டும். மேலும் சீராய்வு மனு நிலுவையில் உள்ள வரை, இடைக்கால குழு செயல்பட தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் அறிவிப்புக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு