ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முகம்மது ரஷ்வி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை-ராமேஸ்வரம் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. பரமக்குடியிலிருந்து ராமேஸ்வரம் வரை 99 கிலோ மீட்டர் தூரத்திற்கு இதுவரையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கவில்லை. இதில் பரமக்குடியிலிருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் சுமார் 18 கிலோமீட்டர் தூரம் தரமற்ற சாதாரண இரண்டு வழிச்சாலையில் தான் வாகனங்கள் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், திடீரென தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் எந்த வித முன் அறிவிப்பும் இன்றி போகலூர் என்ற கிராமத்தில் சுங்க சாவடி மையம் அமைத்து அவ்வழியாக வந்து செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலித்து வருகின்றனர். மேற்படி இடத்தில் சுங்க சாவடி அமைப்பது தேசிய நெடுஞ்சாலை சட்டம் 1956, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது.
மேலும், இந்த டோல்கேட்டில் ஆம்புலன்ஸ், மருத்துவ வசதி, நெடுஞ்சாலைத்துறை ரோந்து வாகனம், கிரேன் வசதி, கழிப்பறை போன்ற எவ்வித அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. ஆம்புலன்ஸ் மட்டும் விதிவிலக்குட்பட்ட வாகனங்கள் கடந்து செல்வதற்கு தனியாக வழிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் இவ்வழியில் அவசரமாக செல்வதற்கு வசதிகள் இல்லை. எனவே எவ்வித அடிப்படை வசதிகளும் முறையான கடக்கும் வசதிகளோ இன்றி இந்த டோல்கேட்டில் பணம் வசூலித்து காலதாமதம் செய்வதை தடுத்து நிறுத்துவதற்கும் இந்த டோல்கேட்டை உடனடியாக மூடுவதற்கும் உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (பிப். 2) நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “75 கிலோமீட்டர் நான்கு வழி சாலையாக இருக்கும் நிலையில், 76 கிமி முதல் 99 கிலோமீட்டர் தொலைவில் இருவழி சாலையாக உள்ளது. அதுவும் புதிதாக சாலை அமைக்கப்படாமல் பழைய சாலையை பழுதுபார்த்து போடப்பட்டுள்ளது. இந்த இரு வழிச்சாலையில் நான்கு வழி சாலை சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.
இருவழிச்சாலைக்கு நான்கு வழிச்சாலைக்கான சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறதே என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அவ்வாறு வசூல் செய்தால் அதற்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினர் மேலும் இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை சார்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க...காவிரி காப்பாளன் என்ற பட்டத்திற்கு பொருத்தமானவர் முதலமைச்சர் - ஆளுநர் புகழாரம்!