மதுரை: புறநகர் மேற்கு ஒன்றியப் பகுதிகளான சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் சந்தித்து அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் சோழவந்தானில் நடைபெற்றது.
இதில் நான்கு பேரூராட்சி பகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அதிமுக வெற்றிபெற பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர் அவர் பேசியதாவது, “வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும். ஏனென்றால் பொய்யான வாக்குறுதிகளை பொதுமக்களிடத்தில் கூறி திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. ஆகையால் மக்கள் திமுக மீது கோபத்தில் உள்ளனர்.
அதிமுக ஆட்சி இருந்திருந்தால் இந்தாண்டு பொங்கல் பரிசுடன் 5ஆயிரம் ரூபாய் பணத்தை வீடுவீடாக வந்து வழங்கியிருக்கும். திமுகவினர் வழங்கிய 500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு பொங்கல் பரிசு பணத்தை இழந்துவிட்டோம் என மக்கள் கருதுகிறார்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்றார்கள். அதையும் வழங்கவில்லை. எனவே அதிமுகவினர் எளிதில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம்.
இந்தாண்டு திமுக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு உகந்ததாக இல்லை. 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பை பார்த்தாலே அதன் தரத்தை உணர்ந்து கொள்ளலாம். எனவே பொதுமக்களிடத்தில் அதிமுகவின் சாதனைகளை விளக்கி கூறி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை ஈட்ட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 'கட்சி மாறினால் வீடு புகுந்து வெட்டுவேன்' - அதிமுக பிரமுகர் மிரட்டல் பேச்சு