மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் இன்று உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டுப்போட்டி நடைபெற்று வருகிறது. இதனைக் கண்டு களிப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை சார்பாக அழைத்து வரப்பட்ட இவர்கள் அனைவரும் ஒரு மணி நேரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டிலிருந்து தமிழ்நாடு சுற்றுலாத் துறை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலமாக 'ஜல்லிக்கட்டு சுற்றுலா' என்ற பெயரில் சென்னையிலிருந்து பயணிகளை அழைத்து வந்து காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து மட்டும் 55 பேர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண வந்துள்ளனர். அதுபோன்று அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் வெளிநாட்டு பயணிகள் வருகை தந்துள்ளனர்.
பிரான்ஸைச் சேர்ந்த பேட்ரிக் கூறுகையில், 'இது ஒரு கலாசாரம் சார்ந்த விளையாட்டு என்பதால் இதனை காண்பதற்காகவே நானும் எனது மனைவியும் பிரான்ஸில் இருந்து வந்திருக்கிறோம். இந்த மரபுகளை நான் பாதுகாப்பது அவசியம்' என்றார்.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண் மணி கோகிலா கூறுகையில், ' மிக பிரமிப்பாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. நான் ஜல்லிக்கட்டு விளையாட்டைக் காண மிகவும் ஆவலோடு வந்துள்ளேன்' என்றார்.
காளைகள் சீறிப் பாய்வதையும் அதனை வீரர்கள் அடக்குவதையும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக பார்த்து ரசித்தனர்.
இதையும் படிங்க: #Jallikattu2020:தொடங்கியது உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு