தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீன் தர உறுதி மற்றும் மேலாண்மைத் துறையின் தலைவர் ஜெயஷகிலா, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் "கடந்த 2016இல் மீன் அறுவடை தொழில்நுட்ப பள்ளியின் தலைவராக நியமிக்கப்பட்டேன். மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தராக எஸ். பெலிக்ஸ் 2017இல் நியமிக்கப்பட்டார். அவர் மீன் அறுவடை தொழில்நுட்ப பள்ளியின் செயல்பாட்டை முடக்கி உத்தரவிட்டார். முதலில் ஒரு ஆண்டுக்கு முடக்கி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை மீன் அறுவடை பள்ளி செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநருக்குப் புகார் அனுப்பினேன்.
இதனால் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி நான் நாகை மாவட்டத்திலுள்ள எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டேன். இதற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தடையாணை பெற்றேன். இந்நிலையில், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் நியமனத்துக்காக விண்ணப்பித்தேன். அதன் தலைவராக நியமனம் செய்வதற்கு எனக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன. இருப்பினும், என்னை விட தகுதி குறைந்த டாக்டர் பி. சுந்தரமூர்த்தி கடந்தாண்டு ஜூன் 26ஆம் தேதி தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். அவர் கல்லூரியின் தலைவராகச் செயல்பட இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிஷாபானு, இது தொடர்பாக மீன்வள பல்கலைக்கழகத் துணை வேந்தர், பதிவாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: 'திமுகவிற்கு தமிழர்கள், இஸ்லாமியர்கள் பற்றி கவலை இல்லை...!'