தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில். மிகவும் பிரசித்திபெற்ற இந்தக் கோயிலில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர்.திருப்பரங்குன்றம் கோயிலை சுற்றி ஏராளமான வணிக நிறுவனங்களும், திருமண மண்டபங்களும், கிரிவலப் பாதையும் உள்ளன.
திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நேரத்தில், மர்ம நபர்கள் கொலை, கொள்ளை, திருட்டு என குற்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருப்பரங்குன்றம் தெற்குப் பகுதி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் நவநீத கிருஷ்ணன், பிச்சை மாணிக்கம், சிராசுதீன் ஆகியோர் காவல்துறையின் உதவியோடு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.
குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டதற்கு பொதுமக்கள், காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பரங்குன்றத்தின் பகுதி வியாபாரிகள் சங்கத் தலைவர் நவநீத கிருஷ்ணன் கூற,'சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் எங்களது சொந்த செலவில் காவல்துறையோடு இணைந்து கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தியுள்ளோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது' என்று தெரிவித்தார்.