சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார், அவரது மகன் ரிஷிகாந்த் இருவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீட் ஆள்மாறாட்ட வழக்கிலிருந்து முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘ரவிக்குமார் ஆகிய நான் ரசாயனக் கம்பெனியின் தலைவராக பொறுப்பிலிருக்கிறேன். எனது மகன் ரிஷிகாந்த் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில்வதற்காகச் சேர்ந்தார்.
இந்நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறி வழக்குப் பதிவு செய்து என்னையும் என் மகனையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். நாங்கள் இல்லாத நேரங்களில் வீடுகளில் சோதனை செய்துவருகின்றனர்.
நீட் தேர்வில் அதுபோன்ற ஆள்மாறாட்ட முறைகேட்டில் நாங்கள் ஈடுபடவில்லை. நீட் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்தபோது அந்த சீட்டில் புகைப்பட மாறுபாடு இருந்தது. இது தொடர்பாக அலுவர்களை அணுகியபோது, நுழைவுச் சீட்டில் திருத்தம் செய்வதற்கான காலக்கெடு முடிவடைந்த காரணத்தால் தேர்வினை எழுதுமாறு அறிவுறுத்தினர்.
ஆனால் தற்போது, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக என் மீதும் என் மகன் மீதும் வழக்கப்பதிவு செய்திருக்கின்றனர். இந்த வழக்கிலிருந்து எனக்கும் எனது மகனுக்கும் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பார்கள் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: காலிங் பெல் அடித்து வீட்டிற்குள் சென்ற பேரறிவாளன்!