ரஜினிகாந்த் - நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள 'தர்பார்' திரைப்படம் நாளை (ஜனவரி 9) திரைக்கு வரவுள்ளது. உலகம் முழுவதும் இப்படம் 7000 திரையரங்குகளில் வெளியாகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் 167ஆவது படமாக உருவாகியுள்ள 'தர்பார்' ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளது.
இந்தியா முழுவதும் இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என 4 மொழிகளில் 4000 திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்பு ஜெயமணி என்பவர் வேல் குத்தியும், மற்றொரு ஜெயமணி, முருகவேல், கோல்டன் சரவணன் என்பவர்கள் மண் சோறு சாப்பிட்டும் 'தர்பார்' படம் வெற்றி அடைய வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர் பாலா தம்பு ராஜ், ' தமிழ்நாட்டு மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்றால் ரஜினிகாந்த் ஆளவேண்டும். கடந்த முறை 'பேட்ட' படத்தின் வெற்றிக்கும் இதேபோன்று அலகு குத்தியும் மண்சோறு சாப்பிட்டும் நேர்த்திக்கடன் இருந்தோம். தற்போதும் அவ்வாறு செய்திருக்கிறோம். ஆகையால் 'தர்பார்' படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என நம்புகிறோம்.
அதுமட்டுமன்றி வருகிற 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டு சட்டமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் ரஜினிகாந்த் போட்டியிட்டு ஆட்சி அமைப்பார் ' என்றார்.