விருதுநகர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், “என் 8 வயது மகள் சங்கீதா. உடல்நலக் குறைவால் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தேன். தொண்டை பாதிப்பால் (டான்சில்) அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென கூறினர்.
கடந்த 16.4.2016ஆம் தேதி அன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை நடந்து முடிந்த சிறிது நேரத்தில் என் மகள் மயக்க நிலைக்கு சென்றார்.
தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவர்கள் அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தவறான மருந்து கொடுக்கப்பட்ட காரணத்தால், சங்கீதாவுக்கு மூளை பாதிக்கப்பட்டுள்ளது. மயக்க மருந்து கொடுக்கும் முன் அவரை மருத்துவர்கள் முறையாக பரிசோதிக்கவில்லை எனவும் கூறினர்.
தொடர்ந்து 83 நாள்கள் கோமாவில் இருந்த நிலையில் கடந்த 5.7.2016ஆம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் என் மகள் இறந்துள்ளார். எனவே, உரிய நடவடிக்கை எடுத்து, ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மனுவானது, மதுரை கிளை நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலான அமர்வின் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அரசுத் தரப்பில் மனுதாரருக்கு எட்டு வாரத்தில் இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வரவேற்பு