ராமநாதபுரம்: முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் பிரபு. இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய மூன்று தாலுகாவில் உள்ள 160 கிராமங்கள் முழுமையாக விவசாயத்தையே நம்பியுள்ளன.
வைகை அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக பயன்படுகிறது. இருப்பினும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்வழிப் பாதைகள் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன.
இந்த நீர்வழிப்பாதைகள் முறையாக பராமரிக்கப்படாததால் நீர் முறையாக செல்வதில்லை. ஆகையால் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய மூன்று தாலுகாவில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி நீர் கிடைக்க வழிவகை செய்ய உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று (டிசம்பர் 14) நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு வாரங்களுக்குள் புது மனுத்தாக்கல் செய்யவும், அந்த மனுவை பரிசீலித்து 4 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்