மதுரை மாவட்டம் நாகமலை அருகே உள்ள என்ஜிஜிஓ காலனியில் அன்னை தெரசா வீதியில் வேங்கட சுப்பிரமணியன் (41), பட்டு மீனாட்சி (33) ஆகியோர் வசித்துவந்தனர். கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. வேங்கட சுப்பிரமணியன் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் என்றும் அவரது மனைவி பட்டு மீனாட்சி மதுரை திருநகரைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பை நிறைவு செய்த வேங்கட சுப்பிரமணியன், டேட்டா அனலைஸிஸ் என்னும் தரவுப் பகுப்பாய்வில் நிபுணத்துவம் பெற்றவராவார். இதனால், பல்வேறு அமைப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும் இந்தப் பணிகளைச் செய்து வந்ததுடன், தன்னுடைய துறை சார்ந்த ஆய்வில் பல மாணவ, மாணவியரையும் வழிநடத்திவந்தார்.
பட்டு மீனாட்சி ஆய்வு மாணவியாக வேங்கட சுப்பிரமணியனிடம் வந்து சேர்ந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து, 2014 டிசம்பர் 10ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சில நாட்களாக இவர்களின் வீடு ஆள் அரவமின்றிக் கிடந்ததுடன், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் நாகமலை காவல் துறையினருக்கு திங்கட்கிழமை பிற்பகல் தகவல் அளித்துள்ளனர்.
வீட்டை சோதனை செய்த காவல் துறையினர், கதவைத் திறந்து மாடிக்குச் சென்று பார்த்தபோது அங்கே வேங்கட சுப்பிரமணியனும், அவரது மனைவி பட்டு மீனாட்சியும் மிகக் கோரமான நிலையில் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து பிரேதங்களைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அவர்கள் இறந்து 5 நாட்களுக்கு மேலாகியிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
தம்பதியின் மரணம் குறித்து அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் கூறுகையில், 'யாருக்கும் எந்தவிதமான தொந்தரவும் இன்றி, வாழ்ந்து வந்தவர்கள். திடீரென இவ்வாறு இறந்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. கணினி, இணையதளம் தொடர்பான வேலைகளை கணவனும் மனைவியும் சேர்ந்தே செய்துவந்தனர். மிக ஆடம்பரமாக வாழ்ந்த இவர்கள் இணையதள ரம்மி சூதாட்டம் மூலமாக பணத்தை இழந்துவிட்டார்கள். ஆகையால் அந்த அவமானம் தாங்காமல் தற்கொலை செய்திருக்கலாம்' என்றனர்.
மேலும் இவர்களுக்குத் திருமணமாகி ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இதுவரை குழந்தைப்பேறு இல்லை. அதன் காரணமாகவும் மனம் நொந்து இந்த முடிவை மேற்கொண்டிருக்கக்கூடும் எனவும் தெரிவித்தனர். நாகமலை காவல் துறையினர் அங்கு கிடைத்த ஆவணங்களைக் கைப்பற்றி தொடர்ந்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாகமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.