கரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதை தவிர்க்க அரசு பல்வேறு நவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதைத் தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டமாக வருவதை தவிர்க்க மதுரை மாநகர காவல்துறை, அத்தியாவசியப் பொருட்களை வீட்டிற்கே சென்று விநியோகம் செய்ய கட்டுப்பாட்டு அறை ஒன்றை திறந்துள்ளது.
இது குறித்து மதுரை மாநகர காவல்துறை ஆணையர் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறுகையில், ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான அத்தியாவசியப் பொருட்களை நேரடியாக அவர்களது வீட்டிற்குச் சென்று விநியோகம் செய்யும் விதமாக காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாட்டு அறை, காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை செயல்படும். 0452 2531044/2531045 ஆகிய எண்ணைத் தொடர்பு கொண்டால், சந்தையிலிருந்து அவர்களது வீட்டிற்கு அத்தியாவசியப் பொருட்கள் கொண்டுச் செல்லப்பட்டு விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மதுரை மாநகரத்திற்குட்பட்ட ஐந்து சரகங்கள் ட்ரோன்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மதுரையில் இதுவரை 144 தடை உத்தரவை மீறியதாக 33 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 332 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைதி காக்கும் பணியில் காவலர்களின் பங்களிப்பு முக்கியமானது - ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்