மதுரை தத்தநேரி பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அந்த மனுவில், "தமிழ்நாட்டில் காற்றாலைகளில் மோதியும், உயர்மின் கம்பிகளில் மின்சாரம் தாக்கியும் பறவைகள் பல உயிர் இழக்கின்றன.
காற்றாலைகள் மூலம் மின்சாரம் பெறுவதில் உலகளவில் இந்தியா நான்காவது இடத்திலும், நாடளவில் தமிழ்நாடு முதலிடத்திலும் இருந்துவருகின்றன. மிக அதிகமான காற்றாலைகள் கடற்கரை ஓரங்களில் அமைந்துள்ளன. காற்றாலைகள், உயர் மின்னழுத்த கம்பிகளின் மூலமாக 0.5% பறவைகள் உயிரிழப்பதாக கூறப்படுகிறது.
இதில் பல அழிந்துவரும் பறவை இனங்கள் முற்றிலுமாக அழிந்துபோவதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் குளிர்காலங்களில் வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வந்துசெல்கின்றன. இவற்றில் காற்றாலை இறகுகளில் மோதியும், மின்னழுத்த கம்பிகளில் அமரும்போது மின்சாரம் பாய்ந்தும் பல பறவைகள் இறந்துவருகின்றன.
2004ஆம் ஆண்டு மத்திய அரசு கொடுத்துள்ள அறிவிப்பின்படி காற்றாலைகளுக்கு ஆரஞ்சு நிற பெயிண்ட் அடித்திருக்க வேண்டும் எனவும், காற்றாலைகள் சுற்றும்போது ஏற்படுகின்ற சத்தம் பறவைகளைத் துன்புறுத்தும் வண்ணம் இருக்கக் கூடாது எனவும் கூறியுள்ளனர்.
இதேபோல் 2016ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவிப்பாணையின்படி உயர் மின்னழுத்தக் கம்பிகளில் செல்லும் மின்சாரமானது சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். ஆனால் இது சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. இது குறித்து மின்னஞ்சல் மூலம் பல அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே தமிழ்நாட்டில் உள்ள காற்றாலைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு பறவைகள் மோதி இறக்காத வண்ணம் புதிய வழிமுறைகளைப் பின்பற்றவும், அதேபோல் உயர் மின்னழுத்த கம்பிகளில் பறவைகள் மின்சாரம் தாக்கி இறக்காத வண்ணம் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் வழிமுறைகளைப் பின்பற்றி, காற்றாலைகளில் ஆரஞ்சு நிற பெயிண்ட் அடிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய சுற்றுச்சூழல் பருவநிலைத் துறைச் செயலர், தமிழ்நாடு ஆற்றல் துறைச் செயலர், தமிழ்நாடு மின்சார வாரிய சேர்மன் ஆகியோர் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 'தேசிய நெடுஞ்சாலைகளில் பேரிகார்டு அமைப்பதில் தனியார் விளம்பரங்களை அனுமதிப்பது ஏன்?'