ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி கண்மாயில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்க தடை கோரி, சாயல்குடியைச் சேர்ந்த பாஸ்கரன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "சாயல்குடியில் உள்ள குழையிருப்பு கண்மாய் அருகில் அரசு பெண்கள் பள்ளி, மாணவியர் விடுதி, ஆரம்ப சுகாதார நிலையம், மயானம் ஆகியவை அமைந்துள்ளன. அருகிலுள்ள கிராமங்களிலிருந்து மழைநீர் வடிந்து இக்கண்மாய் நிரம்பும்.
இதன் உபரி நீர் மூக்கையூர் கடலில் கலக்கும். இந்நிலையில், இந்த கண்மாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக மழை நீர் பள்ளி, குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. அரசுக்கு இது குறித்து மனு அனுப்பியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
கண்மாயின் குறிப்பிட்ட சர்வே எண்ணில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்கும் முயற்சி தற்போது நடந்து வருகிறது. இது உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானது. கண்மாயில் பணிமனை அமைக்க தடை விதிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், துரைச்சாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் முன்னதாக விசாரணைக்கு வந்தது. அதில் ”இது கிராம நத்தம் நிலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, “எவ்வித கட்டுமானமும் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது. பொதுப்பணித்துறை செயலாளர், அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி இரண்டு வாரங்களுக்குள் வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்றனர்.
இதையும் படிங்க: கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்