திருநெல்வேலியைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி, பாபநாசம் ஆகிய ஆறுகள் சுமார் 125 கிலோமீட்டர் பயணம் செய்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கின்றன.
தாமிரபரணி ஆற்றிலிருந்து தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதியையும் மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. சில பகுதிகளிலுள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவு நீர் கலப்பதால், தாமிரபரணி ஆறு மாசடைகிறது. மேலும் குடிநீராகப் பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நவீன இயந்திரங்கள் உதவியுடன் சுத்திகரிப்பு செய்து மறுபயன்பாட்டிற்குக் கொண்டுவந்தால் நோய்கள் பரவாமல் தடுக்கமுடியும். இதுகுறித்து உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ஆற்றின் கரையோரங்களில் சில பகுதிகள் ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டுள்ளன. எனவே தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க, நவீன இயந்திரம் மூலம் கழிவுநீரை மறுசுழற்சி செய்ய இயந்திரங்களை அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்,
இந்த மனு இன்று நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்தரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நவீன இயந்திரம் மூலம் கழிவு நீரை மறுசுழற்சி செய்ய இயந்திரங்களை அமைப்பது குறித்தும், கரைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்தும் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: பள்ளிக் கல்வித் துறையில் குவிந்துள்ள வழக்குகளைக் குறைக்க குழு!