மதுரை: மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது வங்கி கணக்கிற்கு குடும்ப செலவுக்காக அவரது மகன் ரூ. 6 ஆயிரம் அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் ஜெயலட்சுமி வீட்டின் அருகே உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது அவரது ஏடிஎம் கார்டு தடை செய்யப்பட்டதாக, ஏடிஎம் இயந்திரத்தில் தகவல் காண்பித்துள்ளது. ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய அவரிடம், வங்கி ஏடிஎம் கார்டு தொடர்பான விவரங்களை தருமாறு வடமாநில மோசடி கும்பல் அலைபேசியில் அழைத்து கேட்டுள்ளது.
பிரதமர் நிதி என கூறி மோசடி
மோசடி கும்பல் என தெரியாத ஜெயலட்சுமி, அனைத்து விவரங்களையும் அவர்களிடத்தில் கூறியுள்ளார். பின்னர் உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஜெயலட்சுமி, மற்றொரு ஏடிஎம் மையத்திற்கு சென்று குறைந்தபட்ச இருப்புத் தொகையை தவிர, மீதமிருந்த அனைத்து பணத்தையும் எடுத்துவிட்டார்.
இதனையடுத்து ஜெயலட்சுமியை மீண்டும் தொடர்பு கொண்ட வங்கி மோசடிக் கும்பல், ஏன் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுத்தீர்கள் என தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளது.
மேலும் பிரதமர் நிதிக்காக, உங்களது வங்கி கணக்கில் உள்ள ரூ.500 பணத்தை எடுக்கிறோம் என கூறி குறைந்தபட்ச இருப்பு தொகை பணத்தையும் அந்தக் கும்பல் மோசடி செய்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி, உடனடியாக வங்கியை தொடர்புகொண்டு நடவற்றை கூறி புகார் அளித்துள்ளார்.
அவரிடம் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்திய வங்கி ஊழியர்கள், பத்திரமாக வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். தற்போது இதுகுறித்து ஜெயலட்சுமி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: தம்பிக்கு வீசிய வலையில் சிக்கிய அண்ணன்... ஓட ஓட விரட்டி படுகொலை