மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "மதுரை மாநகராட்சி ஆணையர் மிக வேகமாக செயல்பட வேண்டும். மாநகராட்சியில் வருவாய் பற்றாக்குறை உள்ளது. மாநகராட்சி வருவாயை அதிகப்படுத்த ஆணையர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வீட்டுவசதி வாரியத்திலிருந்து மாநகராட்சிக்கு நிறைய வருவாய் வர வேண்டி உள்ளது. ஏறத்தாழ 300 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் வர வேண்டி உள்ளது. இதனை வசூலிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மதுரை மாநகராட்சி பகுதிக்குள் நடைபெறும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்றார். பின்னர் மேயரின் தனி ஆலோசகர் அர்ச்சனா நியமனத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர், "மேயருக்கு இணையாக ஒருவரை நியமிக்க சட்டரீதியாக இடம் இல்லை. நல்ல மேயர் தேர்வு செய்யப்பட்டால் மேயருக்கு ஆலோசகர் தேவையில்லை. ஆலோசனை சொல்ல மாநாகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்கள் துன்பத்தை மட்டுமே அனுபவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, ஆனால், பிரதமர் சொன்னபடி வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். திமுக ஆட்சியில் ஊழல் மட்டுமே நடைபெறுகிறது. மத்திய அரசிடம் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் அண்ணாமலை கூறி வருகிறார்.
அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கட்சி வளர்ச்சிக்காக பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது. பொன்னையன் கருத்துகள் அவருடைய பார்வையில் சொல்லப்பட்டவை. தமிழ்நாட்டில் தற்போது அதிமுக மட்டுமே எதிர்க்கட்சி, அதிமுக காக்கா கூட்டம் அல்ல கொள்கை கூட்டம். திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தனித்து நின்றால் அதிமுக தனித்து நிற்க தயாராக உள்ளது.
என்னுடைய கருத்தை ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் ஏற்றுக்கொள்வார்கள். அண்ணாமலை தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறார். எல். முருகன் வேலை பார்த்தார், அவருக்கு ஒரு அமைச்சர் பதவி வந்தது. தமிழிசை வந்தார், அவருக்கு ஒரு கவர்னர் பதவி கிடைத்தது. பதவிக்காக கூட அண்ணாமலை அரசியல் செய்யலாம், அல்லவா. அதிமுக மீது துரும்பு கொண்டு எறிந்தால், நாங்கள் தூணை கொண்டு எறிவோம்" என்றார்.
இதையும் படிங்க: வி.பி.துரைசாமி அதிமுகவிற்கு சான்றளிக்க அவசியமில்லை - கடுப்பான ஈபிஎஸ்!