மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் வைகாசி மாதம் வசந்த உற்சவ விழா இன்று தொடங்கியது. தற்போதைய ஊரடங்கால், வசந்த உற்சவ விழாவில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.
விழாவின் முக்கிய நிகழ்வாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், மேளதாளம் முழங்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்திலிருந்து பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் முன்பாக வந்தனர்.
பின்னர், அங்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து தேவியர்களுக்கும் பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயில் பணியாளர்கள், பட்டர்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து கலந்துகொண்டனர்.
இவ்விழாவானது அடுத்த மாதம் 5ஆம் தேதிவரை நடைபெறும். விழா ஏற்பாடுகளைத் தக்கார் வெங்கடாசலம், கோயில் நிர்வாக அலுவலர் அனிதா, பணியாளர்கள் ஆகியோர் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கோயில்களை திறக்க தேங்காய் உடைத்த இந்து ஆலய பாதுகாப்புக் குழு!