மதுரை: இதுதொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அகில இந்திய அளவில் ரயில் பயணச்சீட்டுகளை முறைகேடாக விற்ற 5,179 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயணச்சீட்டு வழங்க உருவாக்கப்பட்ட 140 சட்டவிரோத மென்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன.
ரயில்களில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களைக் கடத்திய 1,081 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய ரயில்வேயில் 143 ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை ரயில் நிலையங்களில் 17,756 சிறுவர், சிறுமிகள் மீட்கப்பட்டு, அவர்கள் அனைவரும் முறைப்படி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ரயில்வே சொத்துக்களை அபகரித்த 11,268 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 7.37 கோடி ரூபாய் மதிப்புள்ள ரயில்வே சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. 194 மனித கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 559 அப்பாவிகள் மீட்கப்பட்டுள்ளனர். ஓடும் ரயில்களில் ஏறி நடைமேடையில் விழுந்த 852 பேர், ரயில்வே பாதுகாப்புப் படையால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ரயிலில் தவறவிடப்பட்ட 46.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 25,500 உடைமைகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரயிலில் தனியாகப் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பிற்காக, 640 ரயில்களில் 243 பாதுகாப்புப் படை வீராங்கனைகள் கொண்ட ‘என் தோழி’ என்ற பெயரில் குழுக்கள் பயணித்து வருகின்றன. ஓடும் ரயில்களில் 209 குழந்தைகள் பிறந்துள்ளன.
இந்த தாய்மார்களுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை வீராங்கனைகள் பக்கபலமாக உதவிக்கரமாக இருந்துள்ளனர். 37,000 முதியோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பயணத்தில் காயமடைந்தோர் ஆகியோருக்கு கருணையுடன் உதவிக்கரம் நீட்டி உள்ளது, ரயில்வே பாதுகாப்புப் படை. தேர்தல் காலங்களில் பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அனுப்பப்பட்டு, சுதந்திரமான தேர்தல் நடைபெற உதவியுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்று தணியும் இந்த செல்ஃபி மோகம் - பாம்புடன் செல்ஃபி .. தீண்டிய நாகத்தால் இளைஞர் பரிதாப பலி!