மதுரை: தெற்கு ரயில்வே பொது மேலாளர் (பொறுப்பு) ஏ.கே. அகர்வால், கூடுதல் பொது மேலாளர் பி.ஜி. மல்லையா ஆகியோர் வியாழக்கிழமை (பிப்ரவரி 3) அன்று இணையதளம் வாயிலாகச் செய்தியாளரைச் சந்தித்தனர்.
அப்போது மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்துப் பேசினார். தெற்கு ரயில்வே பாதுகாப்புப் பணிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டதைவிட அதிக அளவாக ரூ.2,374 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
25 ரயில்வே திட்டங்கள்
ரயில் பாதை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.1,470 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக 89.51 விழுக்காடு அதிகமாகும் என்றனர். மேலும் கட்டமைப்புப் பணிகளான இரட்டை ரயில் பாதை, அகல ரயில் பாதை திட்டங்களுக்கு முறையே 283, 73 விழுக்காடு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் ரூ.28,307 கோடி மதிப்பிலான 25 ரயில்வே திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்த நிதி 3077 கி.மீ. ரயில்பாதை திட்டங்களைச் செயல்படுத்த பயன்படுத்தப்படும். இந்தப் பணிகளுக்காக இந்த நிதியாண்டில் ரூபாய் 3865 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2014ஆம் ஆண்டுவரை ஒதுக்கப்பட்ட நிதியைவிட அதிகம் என்றனர். ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 17.2 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படவிருக்கும் புதிய ரயில் பாதை பணிக்கு ரூ.59 கோடியும் மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில்பாதை திட்டப் பணிக்கு ரூ.125 கோடியும், புதிய நவீன பாம்பன் பாலப் பணிக்கு ரூ.50 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றனர்.
ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் மூலமாக நடைபெற்றுவரும் ரயில் பாதை பணிகளுக்கு ரூ.789 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றனர். தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகளுக்கு ரூபாய் 303.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 25 ஆண்டு உழைப்பு: சீட் கிடைக்காத திமுகவினர் கருணாநிதி சிலையிடம் மனு